Monday, March 19, 2012

சமன் செய்து சீர் தூக்கும் கோல்கள்

பலமுறை ஆலோசித்து அதன் பின்பே திரையரங்கு செல்வோம். குறுந்தகட்டின் மூலமோ இணையதளங்கள் மூலமோ பார்ப்பதில்லை. அதனால், ஒரு வருடத்தில் நான் பார்க்கும் படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம், அதுவும் ஒரு கை விரலில்!!!

அரவானைப் பார்த்து வந்த நண்பர்களுக்குள் தீவிர கருத்து வேறுபாடுகள். களவைத் தொழிலாகக்கொண்ட பாலைநிலத்து மக்களை தமிழ் இலக்கண பாடத்தில் படித்ததோடு மறந்தேபோயிருந்தது. அவர்கள் வாழ்வு எப்படியிருந்திருக்கும் என்ற யோசனையுடன்தான் சென்றேன். கதைக்களமும் கதை சொன்ன விதமும், கதை சொல்லும் கருத்தும் வாழ்வின் வேறொரு தளத்துக்கு என்னைக் கொண்டுசென்றதாகவே உணர்கிறேன்.

கலீல் ஜிப்ரனின் கவிதையொன்று! போர் என்ற தலைப்பில் வெகு காலத்திற்கு முன் படித்தது; திருடன் ஒருவனது கண் நெசவாளன் வீட்டில் திருடச் சென்ற இடத்தில் தறியில் பட்டு குருடாகிவிடும். இந்த வழக்கை விசாரித்த மன்னன் நெசவாளன் கண்ணைப் பறிக்கச் சொல்லி உத்தரவிடுவான். தறியின் இரு ஓரங்களையும் பார்ப்பதற்காக தனக்கு இரு கண்களும் வேண்டும் என்றும், தனது பக்கத்து வீட்டில் வாழும் செருப்பு தைப்பவனுக்கு தொழில் செய்ய இரண்டு கண்கள் தேவையில்லை என்றும் நெசவாளி முறையிடுவான். மன்னனும் அந்த 'நியாயமான' வாதத்தைக் கேட்டு செருப்பு தைப்பவனது கண்ணைக் குருடாக்க உத்தரவிடுவான். நீதி நிலை நாட்டப் பெற்றதாக நாடு மன்னனைக் கொண்டாடும்.

நல்ல கவிதை ரசிக்கவைக்கும்; வாசித்த பின் சிந்திக்கவைக்கும்; பல நாட்களுக்கு ஏன் பல வருடங்களுக்குப்பின்னும் மனதில் எங்கோ ஓர் இடத்தில் இருந்துகொண்டு அவ்வப்போது நினைவலைகளில் படகோட்டும்; நமது சிந்தனைகளின் ஓட்டத்தையே மாற்றிக்காட்டும்

அரவானைப் பார்த்து 24 மணி நேரம் முடிந்தாலும் கலீல் ஜிப்ரனின் இந்த வரிகளும், சின்னானின் மரணமும், பாளையக்காரனது தீர்ப்பும், வன்மமும், இமையை உறுத்தும் துரும்பாக, எந்த வேலை செய்தாலும் மனதின் அடியில் ஊடறுத்து ஓடிக்கொண்டேயிருக்கின்றன. இது போல எத்தனை முறை நீதி நிலை நாட்டப்பெற்றிருக்கிறது இப்புவியில்!!! சமன் செய்து சீர் தூக்கும் கோல்கள்தான் எத்தனை எத்தனை!!!

No comments: