Thursday, April 24, 2014

ஒரு பிழை! ஒரே ஒரு பிழை!!

ராமாயணத்தை தெய்வீகக் கதையாய்க் கொள்ளாவிடினும் அவ்வப்போது படிப்பது நன்றென்றே தோன்றுகிறது. இந்த கதைக்குள் இருக்கும் கதைகள் அப்படி!

பள்ளிப் பருவத்திலேயே ராமனை பெரிதாகக் கொண்டடியாவளில்லை நான். ஆணாதிக்கத்தின் வெளிப்பாடாகவே தெரிந்த கதாநாயகன் அவன். சீதை தீக்குளித்தபோது ராமனும் ஏன் தீக்குளிக்கவில்லை என்ற கேள்விக்கு தர்மசங்கடமான சிரிப்புடன் நகர்ந்தனர் தமிழாசிரியர்கள்...

கல்லூரிக் காலத்தில், சீதையைச் சிறையெடுக்க வந்த ராவணன் சீதையிருந்த குடிற்பரப்புடன் பெயர்த்துப் பறந்தான் என்று படிக்கும் போது, சீதையின் கற்புநிலை குறித்த அதீத அக்கறையில் எழுதப்பட்டதாய் நினைத்திருக்கிறேன் - ராவணன் கைகூடப்படவில்லை அவள் மேல் என்ற ஒரு உயர் நிலை தேவைப்பட்டாதாகத் தோன்றியது.

சூர்ப்பனகை தன் விருப்பத்தையுரைத்தபோது அதை மறுக்கும் உரிமை ராமனுக்கு இருந்த போதிலும், எனக்கு மணமாகிவிட்டது என் தம்பியிடம் வேண்டுமாயின் கேள் என்று சொன்னது மமதையின் உச்சமாய்த் தோன்றிற்று. தன் காதலை ஒரு பெண் வெளிப்படுத்தினால் அது இழிவென்றும், காமத்தின் வெளிப்பாடாகவே கருதப்படும் என்றும் பெண்களுக்குக் காட்டப்புனைந்த கதையாகத் தோன்றிற்று. லக்ஷ்மணன் அவள் மூக்கறுத்தபோது, அவளல்லவா அவன் மூக்கறுத்திருக்கவேண்டும் என்ற கோபம் கனன்றது.

ஆனால் ராவணன் கதை, முன்னெப்போதும் இல்லாதவண்ணம் ஒரு வியப்பை அளிக்கிறது. ஞானசம்பந்தர் தனது பெரும்பாலான பாடல்களில் அவனைக் குறித்து எழுதுகிறார்; தன் தேசத்தை நிகரில்லா வளத்துடன் பாதுகாத்திருக்கிறான்; கலையில் வல்லான்; இமயத்தை அசைக்கும் வலிவுள்ளவன்; பேரழகன்சூரியனைப் பிடித்து விளையாடும் வலிவுள்ள ஒரு பிள்ளையின் தகப்பன்;  ஆனால் ஒரு பிழைக்காய் தான் கொண்ட பெருமை அனைத்தும் இழந்தான். உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கொள்வேம் எனல் என்ற குறளுக்கு இதைவிடச் சிறந்த விளக்கம் இருக்க முடியுமா என்று தெரியவில்லை. எத்தனை சிறப்புகளிருப்பினும், ஒரே ஒரு பிழை உயிர் குடிக்கும் என்று காலம் காலமாகச் சொல்லப்பட்ட தேசத்தில் ஏன்  இத்தனை ஊழல்? பிறன்பொருள் கொள்வதில் ஒரு தயக்கமும் இருப்பதாய்த் தெரியவில்லை!! ராவணன்தான் கதாநாயகன் என்று சொல்வோரும்கூட அவன் கதை கூறும் கருத்தைக் கற்று அதன் படி நிற்பதாய்ப்படவில்லை! ராமனைக் கொண்டாடுவோரும் புரிந்து கொண்டதாய்த் தெரியவில்லை!! ஒருவேளை ஒரே ஒரு முறை மட்டும் பிழை செய்திருந்தால் புரிந்துகொண்டிருப்பார்களோ!

நான் சிந்திப்பது புதிய கருத்தாக இல்லாதிருக்கலாம். எனக்கு கடந்த 5 வருடங்களாகத்தான் சற்றுப்புரிவதாயிருக்கிறது!!!

No comments: