Saturday, July 12, 2014

சுயம்பு!!!

கிட்டத்தட்ட, நான் "சுயம்பு. Is there anyone" என்ற கட்டுரையை எழுதிய அதே நேரத்தில் தான் திரு. பெ. கருணாகரன் அவர்களும் தனது மண்ணில் முளைத்த நட்சத்திரங்களை எழுதியிருக்கவேண்டும். நேற்றைய புதியதலைமுறை இதழில் பள்ளிகளை, ஆசிரியர்களை பெற்றோரைக் குறித்து எழுதியிருந்தார். என் கட்டுரையின் களமும் ஆசிரியர்களும் பள்ளியும் என் பெற்றோரும்தான். நான் குறிப்பிட்ட அதே விதத்தில் தான் சுயம்பு என்ற சொல்லைப் பயன்படுத்தியிருந்தார்.  ஆனால் அந்த கட்டுரையில் தான் எத்தனை வேதனை! சுயம்பாய் எவரும் உண்டோ என்ற தொனியில் நான் எழுத, சுயம்பாய் வளரும் வலிமை எல்லோருக்கும் வாய்க்காது என்று அவர் எழுதியிருக்கிறார்!! 

ஒரே கருத்து, ஒருவருக்கொருவர் பரிச்சயமில்லாத (அறிமுகம் கூட இல்லாத) இரு வேறு மனிதர்களால் ஒரே நேரத்தில் ஒரே வார்த்தையை மையமாக வைத்து ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் போல எழுதப்பட்டிருப்பது மிகுந்த ஆச்சர்யத்தை அளிக்கிறது! எனது பள்ளியின் மேன்மையைக் கொண்டாடும் அதே நேரத்தில் அவர் விளக்கும் பள்ளிகளை நானும் உணர்கிறேன். 

கட்டுரைகளின் சாராம்சம் ஒன்றுதான்! தனி மனிதனின் வாழ்வில் பள்ளிகளும் ஆசிரியர்களும் பெற்றோரும் ஆற்றும் பங்கு அளப்பரியது! நம் ஆசிரியப் பெருந்தகைகள் இதை உணர்வது மிகவும் அவசியம். வேறு வேலை கிடைக்காததால் ஆசிரியப்பணி ஏற்கும் அவல நிலை மாறி எழுத்தறிவித்தவன்/எழுத்தறிவிப்பவன் இறைவன் ஆகும் என்று உணர்ந்து செயலாற்றினால் என் கட்டுரையைப் போல ஆசிரியர்களை, பள்ளியை நினைத்ததும் பெருமிதத்துடனும், அன்புடனும் மனம் கசிய எழுதப்படும் கட்டுரைகள் மிகும். அதுவே சிறப்பு மிகுந்த சமுகத்திற்கு அழகு!!

No comments: