Wednesday, August 20, 2014

பெரியோரை வியத்தலும் இலமே! சிறியோரை யிகழ்த லதனினு மிலமே!


மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

இந்த வரிகளைக் கேட்டு வியக்காமல் எவ்வண்ணம் இருப்பது? அனைவரும் சமம் எனக் கொள்வது அத்தனை எளிதான காரியம் இல்லை! சிறியோரையிகழ்தலதனினுமிலமே என்பதைக் கூடக் கடைபிடிக்கலாம் ஆனால் பெரியாரை வியத்தலும் இலமே என்பதைக் கடைபிடிப்பது எப்படி என்ற கேள்வி முதலில் எழுந்தது. ஆனால் கவிதையை மீண்டும் மீண்டும் படிக்கும் போதுதான் கவியின் சொல் வீச்சும் கருத்தாழமும்  தெரிகிறது!

கவிதையின் முதல் வரி மிகவும் பிரசித்திபெற்றது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரிகளைப்  பிரயோகிக்காத தமிழர்கள் உலகில் இல்லையெனவேகொள்ளலாம்! உள்ளூரில் இருந்தாலும் சரி, வெளிநாட்டில் வாழ்ந்தாலும் சரி, எல்லா தமிழர்களும் தம் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த வரிகளைக் கையாளுகிறார்கள் !! சரி, முழுக்கவிதையும்  உங்கள் பார்வைக்கு இதோ!

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

எளிமையாகத் தொடங்கினாலும் ஒவ்வொரு வரியிலும் கருத்தாழம் கூடிக்கொண்டேசெல்கிறது! நன்மை தீமைகள் பிறர் தர வரவில்லையென்றால் எப்படி வருகின்றன? நியூட்டன் விதி போல பிறர்கின்னா செய்தால் தமக்கு தானே வரும் என்பது உள்கருத்து! அதைக்கூட நம்பிக்கையின்பாற்பட்டதாகக் கொள்ளலாம்! ஆனால் துன்பப்படுத்தலும் அது தணிதலும் அதுபோலவேதான் என்ற வரி இன்னும் ஆழமானதென நினைக்கிறேன். ஒரு நிகழ்வு குறித்து துன்பப்படுவதும் துனபம் தணிவதும் பிறராலா அல்லது நாம் உள்மனத்தின் தெளிவாலா?

இறப்பு புதிதில்லை, வாழ்தல் இனிதென்று கொண்டாடவுமில்லை! ஆஹா! மரணம் இயல்பானது, பாவத்தின் சம்பளமில்லை என்ற தெளிவு எத்தனை பெரியது! வாழ்வு இனிதென்று கொண்டாடாத அதே நேரத்தில் கோபம்/வெறுப்பினால் வாழ்வு இனியதல்லவென்றும் சொல்வதில்லை! அடேயப்பா! எத்தனை எதிரெதிரான கருத்துகளை ஒன்றுக்கொன்று முரணாமால் அடுக்கிச்செல்கிறார்! ஆற்றில் மிதக்கும் தெப்பம்போல வாழ்வுசெல்லும் என்று உணர்ந்ததால் புகழில் பெரியோரை வியத்தலும் சிறியோரை இகழ்தலும் இல்லை என்று முடிக்கிறார்!

சிறியோரையிகழ்தல்  அதனினுமிலமே என்பதை முன்னிலைப்படுத்தினால் யாவரும் கேளிர் என்பது கேலிக்குறியதாகிவிடும்! சிறியோர் என நினைத்தால் கேளிராய் நினைத்தல் எங்ஙனம்? பெரியோர் என்று மதிக்கலாம்; ஆனால் மலைத்துப்போனால் இயல்பாகப் பழக இயலாது போகலாம்! அன்பு ஒளிந்துகொள்ளும்; மாறாகப் பணிவு நாடகம் அரங்கேறும்! பெரியோராய்ப் பார்க்கப்படுபவர் நம்மைச் சிறியோராய்க் கருத நேரிடும்! கேளிராய் நினைத்தல் இயலாமல் போகும்! இது தவிர, "வியவற்க எஞ்ஞான்றும் தன்னை"என்ற தெளிவு இருந்தால் மட்டுமே மற்ற இரண்டும் கைகூடும்! இல்லாவிடில் இது ஒரு வெற்று வேடமாகவோ அல்லது கர்வத்தின் மூலகாரணமாகவோ முடியக்கூடும்.

அதுமட்டுமில்லை புகழ்பெறுவதும் பெறாமற்போவதும் வெளியுலகு சார்ந்தது. புகழ்பெற்றவர் எல்லோரும் அறிவுடையவர் என்று சொல்வதற்கில்லை! அறிவில் பெரியோர் சொன்ன கருத்துக்களை உணர்ந்து தெளிந்ததால் மாட்சியின் பெரியோரை வியத்தலும் சிறியோரை இகழ்தலும் இல்லை என்று கூறிய கூரிய அறிவை வியக்காமல் எப்படியிருப்பது!!

அடேயப்பா, பாட்டின் ஒவ்வொரு வரியையும் கடைபிடிப்பதுடன், வள்ளுவரையும் சேர்த்துக் கடைபிடிக்கவேண்டும்! எண்ணிப்பார்க்கையில் மலைப்பாகத்தானிருக்கிறது!

Monday, August 11, 2014

God and Hawthorne Effect

I was reading about Hawthorne Effect - a psychological experiment done about 65 years back. Though there is a lot of debate about the validity of the study and skew in the study, it is an interesting study. One point that struck me was about the effect of perceived attention on the productivity.

Is there a God has been one of the questions I was trying to find an answer for quite long. Corollary is, if God doesn’t exist why would the civilizations come up with such a concept. Almost all civilizations have this concept though the depiction of characteristics of God varied around the culture prevalent in the respective civilizations.  But one thing is common across all depictions of God… that He is omnipresent and He observes everyone and everything! This is the point that strikes a chord with Hawthorne effect!

There can be real attention given to the employees or it could just be a perceived attention. Either way, it has an impact on the way they behaved! Even if God does not exist, even if it is only a perception, the concept can have the same impact on behaviors of people. When you are conscious that someone is observing you all the time, lets say there is someone sitting next to you , the way you behave changes. (It is the same aspect all the call centers capitalize on! When you call them, you would hear them say that the call will be recorded for quality control reasons etc… that is for you to behave properly with their staff J ). If the observer is someone who you respect, care for then the behavior is at its finest form.  After all, all civilizations wanted fine behaviors from everyone. That explains why all of them have a concept of God!!! Of course, definition of fine behavior varies from culture to culture and person to person too.


Hawthorne effect also talks about dip in productivity after a certain period of introducing a change to create the perceived attention. That is why probably there is cadence set in many religions to reiterate the concept ! Corollary is answered! But the main question is still open because  real attention and perceived attention can create the same effect. Is there God? I am still searching… 

Sunday, August 3, 2014

கீதையின் கண்ணன்!


பாரதியைப் பிடித்ததாலோ என்னவோ, சிறு வயது முதலே கண்ணனை எனக்குப் பிடித்தது! கண்ணன் கீதை சொன்னதால், என் பெயரில் கீதை உள்ளதால் பிடித்ததோ என்னவோ! குறும்பும் உற்சாகமுமாகத் திரிந்த கண்ணனின் கதைகள் பள்ளிப்பருவத்தில் ரசிப்புக்கு உரியவையாக இருந்தன. கடவுள் திருடலாமா என்ற கேள்வி எழாமலில்லை. ஆனால் அதையும் மீறி எதிரிகளை எதிர்ப்பதிலும் நண்பர்களுடன் விளையாடுவதிலும் உற்சாகமாக ஈடுபட்ட கண்ணனை, தனது முடிவுகளைத் தானே எடுத்த கண்ணனைப் பிடித்தது.

அலைபாயுதே கண்ணா என்ற பாரதி பாடலைப் பாடாத கேளாத விழாக்கள் விழாக்களே இல்லை என்ற அளவுக்கு பாரதியும் கண்ணனும் எங்கள் பள்ளியில் கோலோச்சினார்கள்! கோகுலத்தில் ஒரு நாள் ராதை கோபத்தில் ஆழ்ந்திருந்தாள் என்ற பாடலுக்கு அபிநயம் பிடிக்க ராதையாய் மேடையேறினாலும், கண்ணனாயில்லையே என்ற கவலை ஒரு வாரம் இருந்ததின் காரணம் கண்ணன் மீதிருந்த பிடிப்பா அல்லது கண்ணனாய் மேடையேறிய, என்னைவிட  ஒரு வயது சிறிய ஹேமா என்னைவிட இரண்டங்குலம் உயரமாயிருந்ததா என்று இன்றும் எனக்குத் தெரியவில்லை :-)

ராமனைப் போல கண்ணன் யாரையும் தீக்குளிக்கச் சொல்லவில்லை என்ற ஒரு காரணமே கண்ணனைப் பிடிக்கப் போதுமானதாயிருந்தது அடுத்த சிலவருடங்களுக்கு. பல பெண்கள் பின்னால் அலைந்தவன் என்ற குற்றச்சாட்டு காதுகளில் ஏறவேயில்லை! ஒருவரைப் பிடித்துவிட்டால் அவர்கள் என்ன செய்தாலும் சரி போலும்! பாண்டவர்களை, முக்கியமாகத் தர்மனை வெறுத்தேன்! ஆனால் திரௌபதிக்காக போரில் தந்திரங்கள் செய்த கண்ணனை ரசித்தேன்! அர்ஜுனனுக்காக அவன் மீது கொண்ட நட்பால், அத்தை மகனென்ற பிடிப்பால் அவனுக்குத் தேரோட்டினான் கண்ணன் என்பதை தீவிரமாக மறுத்தேன்! திரௌபதிக்காக, திரௌபதியே போரிட்டிருக்கலாம், போரிட்டிருந்தால் நன்றாயிருக்கும் என்று நினைத்திருக்கிறேன்! அவளுக்கு ஏதோ காரணத்தால் முடியாமல் போக, அவளுக்காக அர்ஜுனனனையும் இன்னபிற வீரர்களையும் வேலை வாங்கினான் கண்ணன் என்றேதோன்றிற்று!

வேலைக்கு வந்து மேலாளராகி அதன்பின் மென்பொருள் செய்யும் வழிமுறைகளைப் பிறருக்குக் கற்றுத்தரும் நிலைக்கு உயர்ந்தபோது, போரில் ஈடுபடாமல் போர்செய்யும் உத்திகளைக் கற்றுக்கொடுத்த கண்ணனை ஆச்சார்யனாகப் பிடித்தது! பக்தி, கர்ம, ஞான யோகங்களைப் பற்றிப் படிக்கும்போதும் கண்ணனைத்தான் பிடித்தது! காரண காரியம் கருதாது தீவிர பக்தி செலுத்தும் மனநிலையும் எனக்கில்லை, கேள்வியெழுப்பாமல் எதையும் ஏற்கும் மனநிலையும் எனக்கில்லை - அதனால் பக்தி யோகம் வாய்க்கவில்லை! ஞான யோகம் வேண்டுமாயின் ஆத்மவிசாரம் செய்யும் திடமும், நுண்ணறிவும் தேவை. கருத்தைச் செயலாக்கி, அதன் விளைவைப் பார்த்தால்தான் ஒத்துக்கொள்ளும் வினோத மனம் என்னுடையது! அதனால் கர்ம யோகம் ஒன்றுதான் சரிப்படும் என்ற முடிவுக்கு வந்தபோதும் துணைக்கு வந்தது கண்ணன்தான்!

தேவகி போல ஏழு பிள்ளைகளை ஒன்றன் பின் ஒன்றாகச் சாகக்கொடுத்த வலியை  அனுபவிக்க நேர்ந்த போது, கண்ணனை மகனாய்ப் பார்க்கத்தோன்றிற்று! எல்லாக் கண்ணனும் மகவாய்த் தெரிந்த காலம் போய், எல்லாக்குழந்தையும் கண்ணனாய்த் தெரிந்தது!

கண்ணனைக் குழந்தையாய், காவலனாய், காதலனாய், ஆசிரியனாய், தோழனாய்ப் பார்த்த பாரதியைப் படித்ததால் இப்படித் தோன்றுகிறதா என்று யோசிக்க யோசிக்க, என்னைப் போலவே பாரதிக்கும் கண்ணனைப் பிடிக்கும் என்பதால்தான் பாரதியையே எனக்குப் பிடித்ததாகப்படுகிறது! ஹ்ம்!