Monday, October 6, 2014

பேராண்மை!

எழுபது வயதிருக்கும் அந்தப் பெண்மணிக்கு. சற்றே கூனிட்ட முதுகு. வறுமை முகத்தில் வரைந்த வரிகளும் வயது வழங்கிய நரையும் எழுபது வயதைத் தொண்ணூறாய்க் காட்டின. வேலை வேண்டும் என அவர் என்னிடம் வந்த நாளை என்னால் மறக்க இயலாது! ஆயிரம் ரூபாய் சம்பளம் வந்தால் போதுமென்றும் அதற்கு என்ன வேலையும் செய்வதாக அவர் கூறிய நிமிடத்தில் என்னுள் இருந்த உணர்வுகளை எப்படி விவரிப்பது! உடல் கூனிய போதும் உள்ளம் கூனாத கம்பீரம். தன்மானத்துடன் வாழ நினைக்கும் அவரது துணிவையும் நம்பிக்கையையும் வியந்த அதே நேரத்தில் இந்த வயதிலும் கடும் உடலுழைப்பு இருந்தால் மட்டுமே ஒருவேளை பசியாறும் நிலையில் நம் முதியவர்களை வைத்திருக்கும் வலி உயிர் குடைந்தது! அவரை விட வயது குறைந்த என் தாயார் பணி ஒய்வு பெற்று எட்டு வருடமாயிற்று!

ஒரு வேலையும் வாங்காமல், மாதம் ஆயிரம் ரூபாய்களை அவருக்குக் கொடுப்பது எனக்கு கடினமானதல்ல. ஆனால் அவர் அதற்கு ஒத்துக்கொள்வதாயில்லை! அவரது கம்பீரத்தைக் களையும் அவப்பணி எனக்குப் பிடிக்கவில்லை. அதனால், நாற்காலிகளையும், கதவுகளையும், வாரத்தில் சில நாட்கள் ஈரத்துணியால் துடைக்கும் வேலைக்கு மாதம் ஆயிரம் என்று முடிவாயிற்று!  ஒரு மாதம் எளிதாய்க் கடந்தது. இரண்டாம் மாதம் வேலைக்கு வருவதில் சில சிரமங்கள் அவருக்கு - முதுமை அளித்த கொடை! இரண்டு வாரத்திற்குப் பின் வந்த அவர், இனி வேலைக்கு வர இயலாதென்றும் இப்படி விடுப்பு எடுத்தபின்னும் சம்பளம் வாங்குவது சரியில்லை என்று தான் கருதுவதாகவும் கூறி விடை பெற்றார். அந்த மாதச் சம்பளமாக ஒரு ஆயிரம் ரூபாயை அவரிடம் கொடுப்பது பெரும்பாடாய்ப் போயிற்று!!

அடுத்த ஒரு மாதத்தில், அவர் வலி தாங்க முடியாமலோ, அவர் போன்றவர்களை வறுமையில் வைத்திருக்கும் அவமானம் பொறுக்க இயலாமலோ, இயமன் ஒரு பேருந்து வடிவில் அவர் உயிர்பறித்தான்!! கொள்ளி வைக்கப் பிள்ளையில்லை! ஒரு வேளை பணம் இருந்திருந்தால் உறவுப் பிள்ளைகள் ஈமக்கடன் செய்திருக்கக்கூடும்! கூர்காவாக எங்கள் தெருக்களை காவல் காக்கும் அவரது கணவரும் தோழி ஒருவரும் மட்டும் நின்று ஒருவாறாக இறுதி மரியாதை செய்துமுடித்தனர்!!  வேறு யாரும் பெயருக்காகக்கூட, அருகிலில்லை! ஏனென்ற கேள்வியும், இனம்புரியாத வலியும் மனதில்!

ஒரு மரணம் ஒருவரை இப்படிப் புரட்டிப்போடுமா? தாடியுடன் எவரும் பார்த்திராத கூர்க்கா முகத்தில் காடாய் தாடி; நமஸ்தேஜி என்று புன்னகைக்கும் அந்த முகம் நிமிர்ந்து கூட யாரையும் பார்ப்பதில்லை! உணவு உண்பதில்லை!  இறுதிச்சடங்கு செய்த பெண், வருத்தத்தோடு கூறினார், "இப்போதெல்லாம் யாரும் கட்டிய மனைவிக்காகக் கூட இப்படி வருந்துவதில்லை! திருமணம் செய்து கொள்ளாவிடினும், தத்தமது திருமண பந்தத்திலிருந்து ஏதோ காரணத்தால் விலகி, இவர்கள் இருவரும் கிட்டத்தட்டமுப்பது வருடங்களாக ஒன்றாக வாழ்ந்தனர். இப்போது இப்படி ஆகிவிட்டது. கூர்க்கா இன்னும் எத்தனை நாள் உயிருடனிருப்பார் என்று தெரியவில்லை ". அதன் பின்னர் அவர் கூறிய எதுவும் என் செவியில் விழவில்லை! 

பிறன்மனை நோக்காப் பேராண்மை!! எத்தனை எளிதாய்ச் சாடிவிட்டுப்போகிறோம்! மனைவியைத் தினமும் தீக்குளிக்க வைக்கும் ஏக பத்தினி விரத ராமன்கள் எத்தனை பேர்! உணவில் உப்பில்லை என்ற உப்புப் பெறாத விஷயத்திலிருந்து எல்லாவற்றிலும் குறைமட்டுமே காணக் காத்திருக்கும் நக்கீரர்கள் எத்தனை பேர்! தன்னை விட அதிகம் தெரியக்கூடாதென்று, மனைவியின் தன்னம்பிக்கையை பல்வேறு உத்திகள் மூலம் குலைத்துப்போட்டு, கட்டை விரல் கேட்கும்   துரோணர்கள் எத்தனை பேர்! இந்திரன் பிழைக்கு மனைவியை கல்லாக வாழச்சொல்லும் கௌதமர்கள் எத்தனை பேர்! தான் மனதுக்குள் இந்திரானாய் இருந்தாலும், கண்ணகியாகக் கால் சிலம்புவரை கழற்றித் தரவேண்டும் என  நினைப்போர் எத்தனை பேர்! இவை யாவும் பேராண்மையின் இலக்கணங்களா என்ன? பிறன்மனை நோக்குதல் எத்தனை இழிவோ அத்தனை இழிவுதானே இவையும்!! இன்னும் சொல்லப்போனால், பிறன்மனை நோக்குவதற்கு இன்னொருவர் துணை தேவை - நோக்கும் பெண்ணின்/ஆணின் துணை தேவை! ஆனால் பிற குற்றங்களுக்கு இன்னொருவர் துணை தேவையில்லை! ஆனால் அந்த குற்றங்கள் எத்தனை எளிதாக மறக்கப்பட்டுவிடுகின்றன! அலட்சியப்படுத்தப்படுகின்றன! கூடா நட்பு கேடாய் முடியும் என்பதும் ஆறாதே நாவினால் சுட்டவடு என்பதும் நிகரன்றோ!

புலனடக்கம் என்பது எல்லா புலன்களுக்கும்தானே! தனது பேச்சைக்கட்டுபடுத்த இயலாதவர்கள், தன உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள இயலாதவர்கள், பிறரைக் குறைவாய்க்  கருதலாமோ? பொதுவாகவே தன் குற்றம் நீக்கி பிறர்குற்றம் காணும் பண்பு நம்மிடம் குறைந்துகொண்டே இருக்கிறது! வள்ளுவர்கூட, அன்புடைமை, இனியவை கூறல், நடுவுநிலைமை, ஒழுக்கமுடைமை அதிகாரங்களுக்குப் பின்னால்தான் பிறன்மனை விழையாமையை வைத்திருக்கிறார்! அரசியலில் ஆறாவது அதிகாரமாகக் குற்றம் கடிதலை வைத்ததன் மூலம் குற்றம் கடிதலின் சிறப்பை வலியுறுத்திய  வள்ளுவர் "வியவற்க எஞ்ஞான்றும் தன்னை" என்ற கருத்தை அதே அதிகாரத்தில் முன்வைக்கிறார்! உலகப்பொதுமறையை உலகுக்கு அளித்த தமிழ்கூறும் நல்லுலகம் கற்றபின் அதற்குத்தக நிற்காததென்ன?