Monday, December 21, 2015

திருவாசகம்...

திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது எத்தனை உண்மை!

சீரொடு பொலிவாய், சிவபுரத்து அரசே! திருப்பெருந்துறை உறை சிவனே!
ஆரொடு நோகேன்? ஆர்க்கு எடுத்து உரைக்கேன்? ஆண்ட நீ அருளிலையானால்,
வார் கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்; `வருக' என்று, அருள் புரியாயே!

வாடினேன்; இங்கு வாழ்கிலேன் கண்டாய்; `வருக' என்று, அருள்புரியாயே!

இந்த வரிகளை வாசிக்கும்போது உருகா உள்ளமும் இருக்க்ககூடுமோ? விழிகளின் கரை தாண்டாமல் நிற்கக்கூடுமோ துளிகள்? எழுதப்பட்டு பல நூற்றாண்டுகள் கடந்த போதிலும் உரையின் துணையின்றி பொருள் புரிகின்றதே! அதுவே பெருங்கருணை! தமிழின் இனிமைக்கும் இளமைக்கும் சான்று!

தந்ததுன் தன்னைக் கொண்டதென் றன்னைச் சங்கரா ஆர்கொலோ சதுரர்
அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன் யாதுநீ பெற்றதொன் றென்பால்
சிந்தையே கோயில் கொண்ட எம்பெருமான் திருப்பெருந்துறையுறை சிவனே
எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய் யான் இதற் கிலன்ஓர்கைம் மாறே!!

எளிய வார்த்தைகளில் உயிருருகும்! புரியாத வார்த்தைகளில் புரியாத கருத்துக்களை எழுதியவை மட்டுமே காலங்கள் தாண்டி நிற்கும் என்ற மாயையை உடைத்தெறிந்த இந்த வரிகளைப் படிக்கும் பேறுபெற்றதே பெருங்கருணை! இதில் சங்கரா, சிவனே என்ற பதங்களுக்குப் பதிலாக "தமிழே" என்று சொன்னாலும் பொருள் பிறழாதென்றே தோன்றுகிறது! தமிழுக்கும் அமுதென்று பேர்! இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!

No comments: