Friday, January 22, 2016

ஆச்சரியங்கள்!

தாக்ஷாயிணியென்று மனைவி அறியப்படுவதை விரும்பாத சிவன்களும்கூட, மகள் ஜானகியாக, மைதிலியாக, வைதேஹியாக அறியப்படவேண்டும் என்று ஆசைப்படும் ஜனகனாக மாறும் வினோதம்!

கண்ணோடு கண்ணிணை நோக்கியதால் மட்டுமே காதல்வயப்பட்ட ராமனும் சீதையும் மாலைமாற்றும் ஓவியம், காதல்மணத்தை அடியோடு வெறுப்போரின் இல்லத்திருமண அழைப்பிதழிலும் அச்சிடப்படும் வினோதம்!

வாழ்நாளில் பெரும்பகுதியில் பிரிந்திருந்த, ராமனும் சீதையும் நல்ல தம்பதிகளுக்கு எடுத்துக்காட்டாகக் காட்டபடும் வினோதம்!

மயங்கிக்கிடந்த ராமனைஇறந்துவிட்டதாகக் கருதி, என் உயிர்கொள்ளாதிருப்பதென்ன எமனே என்றழுத, தன்னை வருத்திய அரக்கியரையும் துன்புறுத்த நினைக்காத சீதையை உயிருடன் தீயில் இறங்கச்சொன்ன ராமன் கருணைவடிவானவனாகச் சித்தரிக்கப்படும் வினோதம்!

தீயில் தானும் இறங்கி தன் கற்பின் திண்மையை உணர்த்தத்தவறிய ராமன், தீயில்பூத்தமலராக வெளிவந்த சீதையை, பழிப்பு இலள், இனிக் கழிப்பிலள் என்று புகழ்ந்து, தாயாக்கிப் பின்னர் அவளைத் தனியாக  வனவாசம் அனுப்பிய ராமன் அறம்வளர்ப்பவனாகப் புகழப்படும் வினோதம்!

கொடுத்தவாக்கிற்காக உயிர்கொடுத்த தசரதனின் மகனாக இருந்தும், திருமணத்தில் கொடுத்த வாக்கையும், இனிக் கழிப்பிலள் என்று இரண்டாம் முறையாகக் கொடுத்த வாக்கையும் மீறிய ராமன், தந்தைசொல் மீறாத மகனாக சித்தரிக்கப்படும் வினோதம்! சொன்னால் மட்டுமே மீறாதவன், தந்தை வழி நடப்பவனா?

ராவணன்வதைக்குப்பின் போர்க்களம்வந்த சீதையைக்கண்டு படமெடுத்தநாகம்போல் சீறிய ராமன், மகுடம் சூட்டுவதற்கு சற்றுநேரத்துக்குமுன் பறிக்கபட்டாலும்கூட சித்திரத்திலுள்ள தாமரைபோல மலர்ந்தமுகமுடையவனாக இருந்தான் என்று அவனை உயர்பண்பாளனாகக் கொள்ளும் உலகம் வினோதம்! செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான்! அல்லிடத்து காக்கினும் என்? காவாக்கால் என்?

காலப்போக்கில், என் பல்வேறு கருத்துகள் மாறியபோதும், மூன்று வருடத்துக்குமுன் எழுதிய இந்தக் கட்டுரைக்கருத்துமட்டும் இன்றும் மாறாத வினோதம்!

இந்துமதம் மிகப்புகழும் கதாநாயகனை, இறை அவதாரத்தை, இத்தனை பழித்தும், இன்றுமுதல் நீ இந்துஇல்லை, உன்னோடு அன்னம் தண்ணீர் புழங்குவாரில்லை என்று என்னை "மதப்ப்ரஷ்டம்" செய்ய நாட்டாமைகள் இல்லாத வினோதம்!

இத்தனைக்குப்பிறகும் என்னைச்சுட்டுத்தள்ளாத இந்தநாட்டை சகிப்புத்தன்மையற்றதாகக்காட்ட முயலும் உலகம் வினோதம்!

Tuesday, January 5, 2016

ஞாயிறு போற்றுதும்!!

பொங்கலைப் போன்றொரு பண்டிகை பிரிதொன்றுண்டோ!! பழையன கழித்த போகியின் மறுநாள், வீடெல்லாம், வீதியெல்லாம் அடைத்துக் கோலமிட்டு, காய் கனி விரித்து, கரும்புத்தோரணமிட்டு, பனையோலையில் தீமூட்டி கண்கள் கரிக்கப் பொங்கலிட்டு சூரியனுக்குப் படைக்கும் பொங்கலைப் போன்றொரு பண்டிகை பிரிதொன்றுண்டோ!!

நன்றிதெரிவிக்க உலகெங்கும் பல பண்டிகைகள் இருந்தாலும், பொங்கல் என் மனதுக்கு மிகவும் அண்மையானது! பொங்கல் ஏற்பாடுகள் முன்பெல்லாம் மார்கழியின் முதல்வாரம் முதற்கொண்டே தொடங்கிவிடும், வீடு வெள்ளையடிப்பதும், வெங்கலப்பாத்திரங்களை துலக்குவதுமாக!! வெளிச்சுற்றுச்சுவர்களுக்குக் காவியும் சுண்ணமுமாக மாறி மாறி வண்ணம் பூசுவதற்கு மட்டும் சிறுவர்களுக்கு அனுமதி உண்டு! என்னவோ, உலகத்தை ஆளும் உரிமை கிடைத்திட்ட மகிழ்ச்சியுடன், வெள்ளையடிக்கும் மட்டை பிடித்த நாட்கள் மிகவும் இனிமையானவை! அதன்பின் ஆரம்பிக்கும், சுண்ணத்தால் வீடெங்கும் கோலமிடும் போட்டி!! யார் கோலம் பெரியது, நளினமானது, நுட்பமானது என்ற விவாதங்களுடன் நேரம் கழியும்!

இதற்கிடையில், அரையாண்டுப் பரிட்சைக்குப் படிக்கும் வேலைவேறு! பொங்கல் வாழ்த்து அட்டைகள் யாருக்கெல்லாம் அனுப்பவேண்டும் என்பதுவும்தான்! கடையில் வாங்கி அனுப்பிய வாழ்த்து அட்டைகளைவிட, நாமே தயாரித்த அட்டைகளுக்குதான் மதிப்பு அதிகம்! நாமே வரைந்த அழகிய படமோ நாமே எழுதிய கவிதையோ (கவிதை போன்ற ஒன்றோ) இருக்குமாயின் மதிப்பு இன்னும் கூடும்!

பொங்கல்கட்டி தயாரிக்கும் வேலையும் ஒருபுறம் நடக்கும்! செம்மண்ணைக் குழைத்து பெரிய மரக்காலையோ, போணியையோ அச்சாகக்கொண்டு  செய்த பொங்கல்கட்டி உலர்ந்துவிட்டதா என்று பார்க்க ஆசையிருந்தாலும் அனுமதி இருக்காது! காய்ந்த பொங்கல்கட்டிக்கு சுண்ணம்பூசும் வேலை ஒருவேளை கிடைக்கலாம்! ஓலை தறிப்பதுவும் பெரியவர்கள் வேலைதான்!

யார்வீட்டில் பால் முதலில் பொங்கியது என்பதுவும், யார் வைத்த பொங்கலைப் பறவைகள் முதலில் உண்டன என்பதுவும்கூட போட்டிதான்! பொங்கலுடன், தேங்காய்ச்சில்லுகளும் வாழைப்பழத்துண்டுகளும் சேர்த்துப் பிசைந்து பறவைகளுக்கும், அணில்களுக்கும் கொடுத்தபின்னர் சிறுவர் பட்டாளத்துக்குக் கொடுப்பார்கள்! மதிய உணவு, வாழை இலையில் அவியல், பொரியல், கூட்டு, பச்சடி, மசியல், அப்பளம், சாம்பார், ரசம், தயிர், ஊறுகாயுடன் பொங்கல், பூந்தியோடு சர்க்கரைப் பொங்கலும் பழமுமான விருந்தாக இருக்கும்!

மறுநாள், காணும் பொங்கலுக்கு, ஊருக்கு மேற்கே, தனியேயிருக்கும் கல்யாணி அம்மன் கோவிலுக்கும், இராமநதி அணைக்கும் நடந்துசெல்வார்கள் மக்கள்! எங்கள் வோட்டு எப்போதும் கல்யாணிக்குத்தான்!! (இன்றுவரை அந்த கோவிலுக்குள் போனதில்லை என்பது வேறு விஷயம்). ஒரு கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க எங்கள் குழுவுக்கு, ஏறத்தாழ இரண்டுமணி நேரமாகும் என்பதால் பெரியவர்கள் யாரும் எங்களோடு அணி சேர்வதில்லை! வழியில் புல்லின் பூவும், பன்னீர் பூவும் பொறுக்கி பூங்கொத்தாக்கி, வேறு ஏதாவது புதுச் செடி பார்த்தால் அருகே உட்கார்ந்து ஆராய்ச்சி செய்யும் எங்களுடன் வருவதற்கு யாருக்குதான் பொறுமை இருக்கும்? கோவிலருகில், தட்டைப்பாறையில், விளையாடி, ஓடையில் கால் நனைத்து, கொண்டு சென்ற உணவையும் கரும்பையும் தின்று தீர்த்த பின்னர் மீண்டும் இரண்டுமணிநேரமாக அதே தூரத்தைக் கடந்து வீடு வருவது பேரானந்தம்! புதிதாய்ப் பார்த்த செடிகளை விளக்கினால் பெயர் சொல்வார்கள் பெற்றோர்கள்! ஆனால் சொல்லத்தெரியாத வண்ணங்களுடன் விளக்கமுடியா வடிவுடனும் இருந்த பூக்களை  விளக்குவதென்ன அத்தனை எளிதா என்ன!

இதோ, அடுத்த வாரம் பொங்கல்! இரண்டு வருடங்களுக்கு முன் தீட்டிய வண்ணம் புதுகருக்கு குறையமாலிருப்பதால் வெள்ளை அடிக்கும் வேலையில்லை! உபயோகப்படுத்தாத பாத்திரங்கள் பாதுகாப்பாக பாலிதீன் பைகளில் இருப்பதால் துலக்கும் வேலையில்லை! பொங்கல்கட்டியும் பத்திரமாக இருக்கிறது! தளச்செங்கல் போய், "டைல்ஸ்" வந்ததில் வீட்டுக்குள் கோலமில்லை! வெளியில் மட்டும் கோலம் போட இரண்டு மணி நேரமானால் அதிகம்நானுமில்லை என் ஊரில்அதிர்ஷ்டவசமாக, வாசலில் பொங்கலிடுவதும், பறவைகளுக்கு உணவளிப்பதுவும், வாழையிலை விருந்தும், உறவினர் வருகையும் இன்னும் மிச்சமிருக்கின்றன!! காணும் பொங்கலன்று புதிதாய்ப் பார்ப்பவற்றை விளக்குவது எளிதாயிற்று, கையோடு கொண்டு செல்லும் அலைபேசிகள் புகைப்படமும் எடுப்பதால் மட்டுமல்லஒரு கிலோமீட்டரை இரண்டுமணிநேரமாக நடக்க விரும்பாத பெரியவர்கள் கூட்டத்தில் நானும் சேர்ந்துவிட்டேன்  என்பதாலும்தான்!!


ஆனாலும், பொங்கலைப் போன்றொரு பண்டிகை பிரிதொன்றுண்டோ!! பொங்கல் என்ற சொல்லே மனதில் இனிமை கூட்டுகிறது!!! ஆகவே, ஞாயிறு போற்றுதும்!! காவிரி நாடன் திகிரிபோல் பொன்கோட்டு மேருவலம் திரிதலான் அன்று! பொங்கலன்று எங்கள் நன்றியை ஏற்றுக் கொள்வதால் ஞாயிறு போற்றுதும்!! ஞாயிறு போற்றுதும்!!!

Friday, January 1, 2016

2016!

பொழுது புலர்ந்தது
யாம் செய்த தவத்தால்,
புன்மை இருட்கணம்போயின யாவும் 
எழுபசும் பொற்சுடர் ...
எங்கணும் பரவி எழுந்து விளங்கிய 
அறிவெனும் இரவி 
                 - பாரதி